சென்னை மெட்ரோ 2ம் கட்டம்: வழித்தடம் 5-ல் கடைசித் தூண் வார்ப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!

 

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 இன் கீழ், வழித்தடம்-5ல் ECV-03 திட்டப் பகுதிக்கான கடைசித் தூண் வார்ப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேடவாக்கம்-1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 25 மீட்டர் உயரமுள்ள கடைசித் தூணான 'P814' இன் கான்கிரீட் வார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. உள்ளகரம் முதல் எல்காட் வரையிலான 11.3 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் மொத்தம் 513 பெரிய அடித்தளத் தூண்களும், அவற்றுக்காக 2,351 பைல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேடவாக்கம் கூட்டுச் சாலை மற்றும் செம்மொழிச் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தூண்கள் இந்தப் பிரிவிலேயே மிக உயரமானவை (சுமார் 29 மீட்டர் உயரம்). ஏற்கனவே உள்ள மேடவாக்கம் மேம்பாலத்திற்கு மேலே செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

125 மீட்டர் ஆரம் கொண்ட கூர்மையான வளைவுப் பாதையில் 57 மீட்டர் நீளமுள்ள இரும்பு இணைப்புப் பாலமும், மேடவாக்கம்-1 மற்றும் 2 நிலையங்களும் சாலை மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில், பாதுகாப்பான முறையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்து இத்தகைய சிக்கலான கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தூண் அமைக்கும் பணிகள் அனைத்தும் முழுமை பெற்றுள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கும் நோக்கில்,  மெட்ரோ நிலையங்கள் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.