undefined

பாதுகாப்பு வளையத்தில் சென்னை.. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு... மார்ச் 1 வரை ட்ரோன்களுக்குத் தடை! 

'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!
 

பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சென்னையில் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னை பெருநகர காவல்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 

பிரதமர் வந்து இறங்கும் விமான நிலையப் பகுதி, பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக "சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1: இந்த இரண்டு நாட்களிலும் ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்பாடுகளைத் தவிர்த்து, தனியார் அல்லது தனிநபர்கள் எவரும் ட்ரோன்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

ஏற்கனவே பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 19 வரை சென்னையில் ட்ரோன்கள், பாரா கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை இயக்கத் தடை விதிக்கப்பட்ட ஆணை நடைமுறையில் உள்ளது. தற்போது பிரதமரின் வருகையையொட்டி, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகளில் இந்தத் தடை இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் பயண வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.