சென்னையில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை: வரதட்சணைக் கொடுமை புகார்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை!
சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகரைச் சேர்ந்த சந்தோஷ் (29), கோகிலா என்ற அஸ்ரா (26) என்பவரைக் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாவுக்கும் சந்தோஷுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவருக்கு வீடியோ கால் செய்த கோகிலா, உடனடியாக வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சந்தோஷ், கோகிலா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகிலாவின் தாயார் அம்மு, தனது மகளை கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஓட்டேரி போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி ஓராண்டுக்குள் கோகிலா உயிரிழந்ததால், சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.