பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கிய பெண் கைது! வீட்டில் 9 மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை தியாகராயநகரில் பானி பூரி கடைக்காரரை கட்டையால் தாக்கியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவர் பானி பூரி கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் அருகே 33 வயது நிஷாந்தி என்பவர் வசித்து வருகிறார்.
நிஷாந்தி தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அபினேஷ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த நிஷாந்தி, அபினேஷை கட்டையால் தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அபினேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாந்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசாரின் விசாரணையில், நிஷாந்தி மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது, கஞ்சா, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மொத்தம் 27 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.