சென்னை துறைமுகத்தில் புதிய சாதனை! ஒரே நாளில் 14,778 டன் இரும்புக் கட்டிகள் ஏற்றுமதி!

 

 

சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்புக் கட்டிகள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சென்னை துறைமுகத்தின் ஜவஹர் கப்பல் தளத்தில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி ‘எம்.வி. சுப்ரா மோனார்க்’ என்ற சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் வார்ப்பு இரும்புக் கட்டிகளை ஏற்றும் பணி நடைபெற்றது.

அப்போது ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்புக் கட்டிகள் கையாளப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் கையாளப்பட்ட வார்ப்பு இரும்பின் அதிகபட்ச அளவு என்ற புதிய சாதனை உருவாகியுள்ளது.இதற்கு முன்பு கடந்த ஜூலை 30-ம் தேதி ‘எம்.வி. அகியா சாரிஸ்’ என்ற கப்பல் மூலம் 13,208 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து 14,778 டன் இரும்புக் கட்டிகள் ஒரே நாளில் கையாளப்பட்டுள்ளன. புதிய சாதனையை எட்டுவதற்கு பங்களித்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சென்னை துறைமுக தலைவர் சச்சின் எஸ். குர்வே பாராட்டு தெரிவித்துள்ளார்.