அஞ்சலக சேவையில் குறையா? நவம்பர் 6-ல் சென்னையில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்!
சென்னை பொது அஞ்சலகம் சார்பில், அஞ்சல் சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் குறைதீர்ப்பு முகாம் வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தபால்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு இந்த முகாம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது.
அஞ்சலக சேவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகள், சேவைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனைகளை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை நேரில் அளிப்பதுடன், அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைகள் தொடர்பாக நீண்டகாலமாகத் தீர்வு கிடைக்காமல் உள்ள புகார்கள், சேவை குறைபாடுகள் மற்றும் பிற பிரச்சினைகளைத் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.