ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; உதவி டிரைவருக்கு தலையில் காயம்!
சென்னை சென்டிரலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில், உதவி ரெயில் டிரைவர் காயமடைந்தார்.
கடந்த நவம்பர் 2-ம் தேதி இரவு 7.30 மணியளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ரெயிலை டிரைவர் சரவணன் மற்றும் உதவி டிரைவர் மிதுன் இயக்கினர். வியாசர்பாடி - பெரம்பூர் இடையே ரெயில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் என்ஜின் மீது சரமாரியாகக் கற்களை வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் என்ஜினின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சிதறியது. கண்ணாடித் துகள்கள் தாக்கியதில் உதவி டிரைவர் மிதுனின் தலையின் பக்கவாட்டுப் பகுதியிலும் காதிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் பெரம்பூர் பகுதியில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், காயமடைந்த மிதுனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாற்று உதவி டிரைவர் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த ரெயில் இரவு 8.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டது. கல்வீச்சில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க பெரம்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.