திருப்பதிக்கு புறப்பட்ட 11 வெண்பட்டு திருக்குடைகள்... சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ஊர்வலம்!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழக பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. மொத்தம் 11 வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
பாரிமுனையில் தொடங்கிய ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. மாலை 4 மணியளவில் வால்டாக்ஸ் சாலை பகுதியில் நடைபெறும் கவுனி தாண்டுதல் நிகழ்வு முக்கிய நிகழ்வாக உள்ளது.
தொடர்ந்து ஊர்வலம் அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடையும். அங்கிருந்து அடுத்தடுத்த நாட்களில் வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக திருப்பதி நோக்கி திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட உள்ளன.செப்டம்பர் 18-ம் தேதி காலை திருப்பதியை சென்றடையும் திருக்குடைகள், பின்னர் திருமலை மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்களுடன் தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.