சென்னைக்கு நவ.19-ல் கனமழை எச்சரிக்கை! 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் நவம்பர் 19-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 16-ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 17) மாலை தீவிர புயலாகவும், 19-ம் தேதி காலை மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நவம்பர் 20-ம் தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - துனி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
நவம்பர் 18-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழையும், 19-ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.