நாளை விநாயகர் சதுர்த்தி... சென்னை முழுவதும்  1,562 சிலைகள்... 18,000 போலீசார் குவிப்பு!

 

 

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப்.14) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விழாவையொட்டி 16,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்து சுமார் 3,000 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன.

 

விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். தீயணைப்புத் துறை, மின்வாரியம் உள்ளிட்டவற்றிடமிருந்தும் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களால் சிலைகள் தயாரிக்கக் கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் முழக்கங்களுக்கும் அனுமதி இல்லை.மேலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 தன்னார்வலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வலப் பாதைகள் மற்றும் சிலை கரைப்பு இடங்களில் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது