இன்று மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள்... வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா வரலாற்று வெற்றி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சென்னையின் முக்கியத் தொகுதியான வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்தொகுதியில் களம் இறங்கிய தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் கார்த்திக் மோகனை சுமார் 15,748 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் குடும்ப அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒரு மாபெரும் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இளைஞர்களும், பெண்களும் ஒன்றிணைந்து திமுகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பமே திரண்டு வந்து வேலை செய்த வில்லிவாக்கம் தொகுதியிலேயே திமுக தோல்வியைத் தழுவியிருப்பது, அக்கட்சியின் வீழ்ச்சியை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார்.
தவெக என்ற புதிய கட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த அரசாங்கமே நின்ற போதிலும், மக்கள் மாற்றத்தின் பக்கம் நின்றுள்ளதாக ஆதவ் அர்ஜுனா பெருமிதத்துடன் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைவார் என்று தான் முன்னரே கணித்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய தேர்தல் வரலாறு இந்தியாவே எதிர்பார்க்காத ஒன்று என்று கூறினார். இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வில்லிவாக்கம் பகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் விசில்களை ஊதி உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.