வீட்டிற்குள் புகுந்து  இளம்பெண்   வெட்டிக்கொலை...  பட்டப்பகலில் பயங்கரம்! 

 

ஆவடியை அடுத்த மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. 36 வயதான இவருக்குக் கலைபவானி என்ற 35 வயது மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரஜினி கோயம்பேடு சந்தையில் பூ வியாபாரம் செய்து வரும் நிலையில், திருவேற்காடு அருகே சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளார். ரஜினி வியாபாரத்திற்குச் சென்ற நேரத்தில், கலைபவானி வீடு கட்டும் பணிகளைக் கவனித்து வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் துணிகளை அயர்ன் செய்யும் கடை வைத்திருந்த முருகன் என்ற 36 வயது நபர், கலைபவானிக்கு உதவி செய்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தவறான உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு இடையே புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டு ரஜினி தனது குடும்பத்துடன் குடியேறிய பின்பு, கலைபவானி முருகனுடன் பேசுவதைத் தவிர்த்து அவருடன்  தொடர்பைத் துண்டித்ததாக தெரிகிறது.  

இதனால் ஆத்திரமடைந்த முருகன் கலைபவானியின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் கலைபவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்து கால் முறிந்த முருகனைப் பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருவேற்காடு காவல்துறையினர் கலைபவானியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.