தொழிற்சாலை கழிவு குடோனில் தீ விபத்து... வானம் வரை விரிந்த புகை மண்டலம் !
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளைப் பிரித்து எடுக்கும் தனியார் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக் கூடியவை என்பதால், தீ விபத்தானது குடோனின் மற்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது.
இந்த விபத்தின் காரணமாகக் குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்து வருகின்றன. குடோன் முழுவதும் இருந்து கரும்புகை வெளியேறி வானுயரத்திற்குப் படர்ந்து வருவதால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாகக் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் பகுதி தீயணைப்பு வீரர்கள், அதிவேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்துக் குன்றத்தூர் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்த ஊழியர்கள் அனைவரும் முன்கூட்டியே வெளியேறியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.