மாதவிடாய் காரணத்தால் 11 வயது மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியர்!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர். மதிய உணவு இடைவேளை முடிந்துவகுப்புகள் தொடங்கிய போது, அந்தச் சிறுமியிடம் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதாகக் கூறி வகுப்பறை ஆசிரியர் கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். சக மாணவிகள் முன்னிலையில் அந்த ஏழைச் சிறுமியை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறும், பாடம் முடியும் வரை அங்கேயே நிற்குமாறும் அவர் கோபமாகக் கூறியுள்ளார்.
ஆசிரியரின் இந்த இரக்கமற்ற செயலால் மனமுடைந்த அந்த 11 வயதுச் சிறுமி, பள்ளி முடியும் வரை பல மணி நேரம் வகுப்பறைக்கு வெளியிலேயே அழுதுகொண்டே நின்றுள்ளார். பள்ளி நேரம் முடிந்து மாலை வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி, தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இயற்கையான உடலியல் மாற்றமான மாதவிடாய் காலச் சூழலைக்கூடப் புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் ஆசிரியரே சிறுமிக்கு இவ்வாறு தண்டனை வழங்கிய விபரம் பெற்றோரை நிலைகுலைய வைத்துள்ளது.
மகளின் கண்ணீரைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று நிர்வாகத்திடம் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இத்தகைய பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட அந்த வகுப்பறை ஆசிரியர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த இந்த மன உளைச்சல் விபரம், சென்னை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.