சென்னை நாள்... தமிழகத்தின் வெற்றித் தலைநகராக சென்னை திகழ்கிறது - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

 

 

சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இந்தச் சிறப்புமிக்க நாளில், தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பும், நவீன வேகமும் கொண்ட சென்னை, அனைவரையும் அரவணைக்கும் மாநகரமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!

வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம்,… pic.twitter.com/8CNCLndNO9

— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2026

கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சென்னை உலகத் தரம் வாய்ந்த வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைத் தனது மடியில் ஏந்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி வரும் பெருமை சென்னைக்கு உண்டு. உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக விளங்கும் சென்னையின் சிறப்புகளை இந்த நன்னாளில் நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகரின் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம் என முதலமைச்சர் உறுதியேற்றுள்ளார். பாதுகாப்பான சூழலையும், வளமான வாழ்வையும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடச் செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சென்னைப் பெருநகரம் மென்மேலும் வளர்ந்து, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.