சென்னை - தென்காசி தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு; நவ.7 அதிகாலை புறப்பாடு!

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில் எண் 06049: தாம்பரம் – தென்காசி சிறப்பு விரைவு ரயில் நவம்பர் 7-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 4.45 மணிக்கு தென்காசியைச் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

அதே போன்று செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (06050) நவம்பர் 9-ம் தேதி மாலை 3 மணிக்குச் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 10-ம் தேதி அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 3-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து பயணத்தைத் திட்டமிடலாம்.