சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மே 25-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், ஜிராம்காட்டி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய வன்முறைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் மற்றும் முக்கியத் தலைவர்கள் உட்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், படுகாயமடைந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லாவும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.

இவ்வழக்கு தொடர்பாகச் சத்தீஸ்கர் ஜகதால்பூரில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் கைதான 10 மாவோயிஸ்டுகளுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.