வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள்! வலை வீசி மீட்ட மதுப்பிரியர்கள் - வைரல் வீடியோ
சத்தீஷ்கார் மாநிலத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்களை மக்கள் பிடிக்க முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.சத்தீஷ்கார் மாநிலம் தாம்தாரி மாவட்டத்தில் உள்ள குருத் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்று வெள்ளத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளநீரில் மிதந்து வந்த மதுபாட்டில்களை பாலத்தின் மீது இருந்த சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து அவற்றை பிடிப்பதற்காக மக்கள் அங்கு திரண்டனர். சிலர் மூங்கில் கம்புகளில் சேலை மற்றும் வலைகளை கட்டி, வெள்ளநீரில் மிதந்து வந்த பாட்டில்களை பிடிக்க முயன்றனர்.இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஆற்றில் வேகமாக தண்ணீர் செல்லும் நிலையில், மக்கள் பல்வேறு வழிகளில் மதுபாட்டில்களை மீட்க முயற்சிப்பது பதிவாகியுள்ளது.
இதற்கிடையே சத்தீஷ்கார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ்தார், தாம்தாரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்களை மக்கள் பிடிக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.