4 கால்களுடன் வந்த அபூர்வ கோழியைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியை சேர்ந்தவர் ஜாசிம். இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு விற்பனை செய்வதற்காக மன்னார்காட்டில் இருந்து கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றுள் ஒரு கோழி மட்டும் வித்தியாசமாக 4 கால்களுடன் இருப்பதை ஜாசிம் கண்டறிந்து ஆச்சரியமடைந்தார்.

அந்த கோழிக்கு 2 கால்கள் நீளமாகவும், மற்ற 2 கால்கள் சிறியதாகவும் காணப்பட்டது. கோழி நடக்கும் போது அதன் பின்பகுதியில் உள்ள 2 சிறிய கால்கள் தரையைத் தொடுவதில்லை. இந்த விசித்திரமான கோழி பற்றிய செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் இறைச்சி கடைக்கு ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

அபூர்வமாக கிடைத்த இந்த கோழியைத் தனது கடையிலேயே வளர்க்க ஜாசிம் முடிவு செய்துள்ளார். இதனை இறைச்சிக்காகவோ அல்லது வேறு யாருக்குமோ எந்தக் காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யப் போவதில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரக் கோழியைப் பார்ப்பதற்காக ஜாசிமின் கடைக்கு வரும் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.