undefined

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்களுக்குச் சிறப்புப் பரிசுகள்!

 

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வரும் கட்சித் தொண்டர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் கூட்டமாக வந்து முதலமைச்சருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரை வாழ்த்த வரும் அனைவருக்கும் திமுக சார்பில் ஒரு தொகுப்புப் பரிசு வழங்கப்படுகின்றன. அதில், திமுகவின் அடையாளமாக  கட்சித் துண்டு மற்றும் தொப்பியும் வழங்கப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுக்கால திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய சிறப்புப் புத்தகம் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் புகைப்படம் அடங்கிய நினைவு பேட்ஜ் விநியோகிக்கப்படுகின்றன.

பிறந்தநாளை முன்னிட்டு, காலையிலேயே மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குத் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல், இரத்த தான முகாம்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ஒருபுறம் மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் சென்னையில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா திமுகவினரால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, இந்த இரு நிகழ்வுகளுமே அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.