சென்னையில் ஆட்டோவில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு - கரும்பு ஜூஸ் குடித்து மக்களுடன் கலந்துரையாடல்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டும், ஆட்டோவில் பயணித்தும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது இந்திய மகளிர் கபடி வீராங்கனை கார்த்திகா தலைமையிலான குழுவினர், "தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்" என முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். அங்குள்ள பெண்கள் முதலமைச்சரை ஆரத்தழுவி வரவேற்றதுடன், குழந்தைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானாவிற்கு ஆதரவாக வேளச்சேரி காந்தி சாலையில் வாக்குச் சேகரித்தார். இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்து முதலமைச்சரை வரவேற்றனர். விசிக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வழங்கிய கட்சித் துண்டுகளை அணிந்தபடி அவர் மக்களிடம் ஆதரவு கோரினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு ஆதரவாகச் சைதாப்பேட்டையில் பிரசாரம் செய்த முதலமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் வருகை தந்து மக்களை ஆச்சரியப்படுத்தினார். கலைஞர் வளைவு முதல் ஜோன்ஸ் ரோடு வரை நடந்து சென்று வாக்குச் சேகரித்த அவருக்கு, நரிக்குறவர்கள் பாசி மணி மாலை அணிவித்துச் சிறப்பித்தனர். பிரசாரத்தின் ஊடே ஒரு கடையில் அமர்ந்து கரும்பு ஜூஸ் குடித்தபடி பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், அதன் பிறகு வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும், மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. நாளை மறுதினம் (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.