பட்டு வேட்டி-சட்டையில் மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்!

 

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், பொதுவாக அரசியல் தலைவர்கள் அணியும் வெள்ளை வேட்டி-சட்டைக்கு மாற்றாக, மேற்கத்திய பாணியிலான கருப்பு நிற கோட்-சூட் உடைகளிலேயே வலம் வந்த முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், இன்று முதன்முறையாகத் தூய தமிழ் பாரம்பரிய உடையில் காட்சியளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபல டிஜிட்டல் பிராண்டிங் நிறுவனமான 'தி ரூட்' அமைப்பின் உரிமையாளரும், முதலமைச்சர் விஜய்யின் நீண்டகால நம்பிக்கைக்குரிய மேலாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமியின் இல்லப் புதுமனை புகுவிழா இன்று காலை சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. தனது நெருங்கிய நண்பருமான ஜெகதீஷின் இந்த குடும்ப விசேஷத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் விஜய் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து நேரில் வருகை தந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர், ஜெகதீஷின் குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

"பட்டாடையில் முதல்வர் விஜய்"

நீலாங்கரையில் மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் இல்ல விழாவில் பட்டு உடையில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்#Chennai #CMJosephVijay #Managerfunction #Newstamil24x7 pic.twitter.com/kuaOiuxOM0

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) May 29, 2026


முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதற்கொண்டு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது வரை விஜய் எப்போதும் கருப்பு நிற கோட்-சூட் ஆடைகளையே பயன்படுத்தி வந்தார். கருப்பு நிறம் என்பது ஆளுமை, அதிகாரம் மற்றும் தனித்துவத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் சூழலில், அவர் இந்த உடையை விரும்பித் தேர்வு செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நீலாங்கரை இல்ல நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், தற்காலிகமாக ஆடைகளை மாற்றிக் கொள்ள நேரம் ஒதுக்காமல், அதே பாரம்பரிய பட்டு வேட்டி-சட்டை உடலமைப்பிலேயே நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்குத் தனது அரசுப் பணிகளை மேற்கொள்ள வருகை தந்தார்.

வழக்கமாக மேற்கத்திய உடையில் மிரட்டும் தங்களது புதிய முதலமைச்சரை, திடீரெனத் தூய தமிழ் உடையில் பார்த்த தலைமைச் செயலக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் அவரை வரவேற்றனர். எப்போதும் கோட்-சூட்டில் கம்பீரமாக வலம் வரும் முதலமைச்சரின் இந்தத் திடீர் பாரம்பரிய ஆடை மாற்றம் குறித்த புகைப்படங்கள் மற்றும் பின்னணி தகவல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.