இந்து சமய அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறைக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

TNPSC தேர்வு மூலம் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம்), 38 உதவி ஸ்தபதிகள் மற்றும் 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறைக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவிப் பொறியாளர் மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.23.67 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ் முடிகாணிக்கை மண்டபம், ஒரே நேரத்தில் 125 பேர் அமர்ந்து உணவருந்தும் அன்னதானக் கூடம், 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், துறைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் மற்றும் கூடுதல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.