சாந்தனுவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் விஜய்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 'திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தந்தை கே.பாக்யராஜின் திடீர் மறைவால் நிலைகுலைந்து கலங்கி நின்ற அவரது மகன் நடிகர் சாந்தனுவை, முதலமைச்சர் விஜய் கட்டியணைத்து ஆறுதல் கூறிய நெகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய், கே.பாக்யராஜின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது குடும்பத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொண்டார்.
தந்தை இன்றித் தவித்த தம்பி சாந்தனுவின் தோள்களைக் கட்டியணைத்து, அவருக்குத் தைரியம் கூறித் தேற்றினார். முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகிப் மாபெரும் வெற்றி பெற்ற 'மாஸ்டர்' திரைப்படத்தில், நடிகர் சாந்தனு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, கே.பாக்யராஜின் மனைவியும் மூத்த நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜைச் சந்தித்து முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா’ திரைப்படத்தில், பூர்ணிமா பாக்யராஜ் அவருக்குத் தாயாக அசாத்தியமான முறையில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இவ்வாறு விஜய்யின் திரைப்பயணத்திலும், அவரது குடும்பத்துடனும் மிக நெருங்கிய அசாத்தியப் பிணைப்பைக் கொண்டிருந்த குடும்பம் என்பதால், முதலமைச்சர் விஜய் மிகுந்த துயரத்துடன் அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.
அவரது இறுதி விருப்பத்தின்படி கண்கள் வெற்றிகரமாகத் தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக அரசின் முழு 'அரசு மரியாதை' யுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதிச் சடங்குகள் முறைப்படி நடைபெறவுள்ளன.