"முதல்வர் விஜய் மக்கள் முன் நடித்துக் கொண்டிருக்கிறார்" - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

 

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடு தான் பேசுகிறோமா என்பதை அவர் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தார்.

 


விஜயின் இந்தப் பிரசாரக் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகக் கூறிவிட்டு மக்கள் முன் விஜய் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பதாகக் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி விட்டு தவெகவை 'தூய சக்தி' என்று கூறுவது எப்படி சாத்தியம் என்றும், திமுகவும் பாஜகவும் வேறு வேறல்ல என்ற விஜயின் குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவை எதிர்த்து தவெக இதுவரை நடத்திய போராட்டங்கள் என்னென்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெற்றி மின்வெட்டு, வெற்றி அரிவாள் வெட்டு, வெற்றி விலைவாசி உயர்வு என திமுக ஆட்சியின் திட்டங்களை மாற்றி அமைப்பதைத் தவிர வேறு புதிய திட்டங்களை தவெக அரசு கொண்டு வரவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு மற்றும் கரூரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்துப் பொதுவெளியில் பேசும் போது முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவருக்கே உரிய கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தாங்கள் பேசும் வார்த்தைகள் குறித்துச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.