எம்.ஜி.ஆர் வழியில் முதலமைச்சர் விஜய்... கொல்லூர் மூகாம்பிகைக்கு 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் சி.எம்.விஜய், அன்னை மூகாம்பிகைக்கு 1.6 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட 'வெள்ளி வாள்' ஒன்றை நெகிழ்ச்சியுடன் காணிக்கையாக வழங்கியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பின்பற்றி இந்த வாள் வழங்கப்பட்டுள்ளது.
கோவிலில் பாரம்பரிய முறைப்படி சட்டை அணியாமல், சிவப்பு நிறச் சால்வை அணிந்து முதலமைச்சர் விஜய் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த வழிபாட்டின் போது, தனது சொந்த செலவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 1.6 கிலோ எடையுள்ள அசுர வடிவிலான வெள்ளி வாளை அன்னை மூகாம்பிகையின் பாதத்தில் சமர்ப்பித்துக் காணிக்கையாக அளித்தார்.
தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் வெற்றியின் சின்னமாக இந்த வாளைக் கோவிலுக்கு வழங்குவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மனுக்குத் தினந்தோறும் நடைபெறும் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளின் போது, இந்தக் காணிக்கை வாளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோவில் தலைமை அர்ச்சகர்களிடம் அன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அன்னை மூகாம்பிகையின் தீவிர பக்தராகத் திகழ்ந்தவர். அவர் தனது வாழ்நாளில் இந்தத் தலத்திற்கு வந்தபோது, அன்னைக்கு ஒரு தங்க வாளைக் காணிக்கையாகப் பரிசளித்திருந்தார். அது இன்றும் விசேஷ நாட்களில் அம்மன் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவரைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவும் இந்தக் கோவிலுக்குப் பலமுறை வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளார். தற்போது அதே வழியில், தமிழகத்தின் புதிய முதலமைச்சரான விஜய்யும் அன்னைக்கு வெள்ளி வாள் காணிக்கை அளித்திருப்பது, எம்.ஜி.ஆரின் ஆன்மீக நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகக் கோவில் நிர்வாகத்தினரும், ஆன்மீகப் பெரியோர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.