"காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் கலைக்க வேண்டும்" - கே.என்.நேரு!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள சூழலில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான திமுக, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குக் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, கர்நாடக அரசின் அத்துமீறல் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனத் தொடர்ந்து கூறி வருவதற்குப் பதிலடி கொடுத்துள்ள கே.என்.நேரு, "தமிழகத்தில் தற்பொழுது பலவீனமான ஒரு கூட்டணி ஆட்சிதான் அமைந்திருக்கிறது என்று கர்நாடக அரசு தவறாகக் கணக்குப் போடுகிறது.
தமிழக ஆளுங்கட்சியின் இந்த பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுதான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மிகவும் ஆணவத்தோடு தொடர்ந்து பேசி வருகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் நீர்வரத்து உரிமையைப் பாதுகாக்கப் புதிய அரசு தவறிவிடக் கூடாது என எச்சரித்துள்ள அவர், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இப்போதாவது தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும். கர்நாடக அரசின் இத்தகைய தன்னிச்சையான முயற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே முறியடிக்கத் தேவையான அழுத்தமான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்." என்று தவெக அரசுக்கு அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள இந்த ஆரம்ப நாட்களிலேயே, மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பின்னடைவாக அமைந்துள்ள சூழலில், திமுக இந்த விவகாரத்தை முன்வைத்து அரசுக்கு அரசியல்ரீதியான அழுத்தங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.