லண்டனில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகள் - 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள்!
இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
உலகளாவிய முன்னணி பன்னாட்டு நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதிகள் நிறுவப்படவுள்ளன. இதன்மூலம் சுமார் ரூ.11,000 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 7,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி முதலீடு செய்கிறது. இதன்வழி 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்யவுள்ளது.
ஏர்ன்ஸ்ட் & யங் சர்வதேச நிறுவனத்திற்காக மவுண்ட்-பூந்தமல்லி சாலைப் பகுதி வழித்தடத்தில் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய உலகளாவிய திறன் மையம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்காக ரூ.3,000 கோடி முதலீட்டுக்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது.
அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா தலைமையிலான குழுவினர் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினர். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'வெற்றி' மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான முதலீடுகளின் முன்னேற்றம் குறித்தும், காற்றாலை மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
பிரிட்டன் இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுடன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துமாறு முன்னணி வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் விண்வெளி, பாதுகாப்பு, இரசாயனங்கள் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்களுடன் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். இந்நிகழ்வுகளில் இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.