முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி பயணம்; முழு பயண திட்டம்! 

 

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், அண்மையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரிடையாகச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் கரூர் மாவட்டத்திற்குப் பிரம்மாண்ட அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் விஜய்யின் இன்றைய அதிகாரப்பூர்வப் பயணத் திட்டத்தின் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் விஜய் காலையில் 9 மணிக்கு தனது சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார்.

காலை 9:20 மணி - சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலமாகத் திருச்சி நோக்கிப் புறப்படுகிறார்.

காலை 10:30 மணி - திருச்சி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடையும் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சித் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

காலை 10:45 மணி - திருச்சி விமான நிலையத்திலிருந்து காரில் அமர்ந்து, சாலை மார்க்கமாகக் கரூர் மாவட்டத்தை நோக்கிப் புறப்படுகிறார்.

நண்பகல் 12:15 மணி - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல்: கரூர் வந்தடையும் முதலமைச்சர் விஜய், அண்மையில் நடைபெற்ற அசம்பாவித கூட்ட நெரிசலில் சிக்கிப் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரிடையாக அவர்களது இல்லங்களுக்குச் சென்று சந்தித்து, நிதியுதவிகளை வழங்கித் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவிக்கிறார்.

மதிய உணவு மற்றும் ஓய்வு: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பிறகு, மதிய உணவு மற்றும் குறுகிய கால ஓய்விற்காகக் கரூரில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்திற்குச் செல்கிறார்.

மாலை 3:00 மணி -  கரூரின் முக்கிய நிகழ்வாக, மாலை 3 மணிக்குக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். அங்கு மாவட்டத்திற்கான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேருரையாற்றுகிறார்.

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகக் கரூர் மாவட்டத்திற்கு அரசுப் பயணம் மேற்கொள்வதாலும், அண்மையில் தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் நாமக்கல் மருத்துவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் பரபரப்பான சூழல் நிலவுவதாலும், கரூரில் பாதுகாப்புப் பணிகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி முதல் கரூர் வரையிலான நெடுஞ்சாலைகள் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடங்கள் முழுவதிலும் திருச்சி மற்றும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுத் தீவிரப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். முதலமைச்சர் வருகையையொட்டி பொதுமக்களுக்குத் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, கரூர் நகரப் போக்குவரத்து போலீசார் பல்வேறு மாற்றுப் பாதைகளை அமைத்து நெரிசல்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.