இன்று முதல்வர் விஜய், தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசனை...  கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!

 

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பது குறித்துக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை; அது ஒரு பிறக்காத குழந்தை போன்றது. தமிழ்நாட்டிற்கும் தென் மாநிலங்களுக்கும் பாதிப்பு வராது என்பதில் திமுக உறுதியாக உள்ளது" என்றார்.

தற்போதைய முக்கியப் பிரச்சினை மேகதாது மற்றும் காவிரி தண்ணீர் விவகாரமே எனக் குறிப்பிட்ட அவர், அதைத் திசைதிருப்பவே முதல்வர் விஜய் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதில் பங்கேற்பது குறித்துத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறினார்.