மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கிறார் முதலமைச்சர் விஜய் - சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீரைத் திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையின் மூலம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு உரிய காலத்தில் மழை இல்லாததால் தாமதமாகத் திறக்கப்படும் நீர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 45 நாட்களுக்குத் திறந்துவிடப்படவுள்ளது.
இதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்குச் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வரும் முதலமைச்சர் விஜய், சாலை மார்க்கமாக மேட்டூர் சென்று அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளார்; பின்னர் தேவைக்கேற்ப நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
முதலமைச்சரின் சேலம் வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஓமலூர் முதல் மேட்டூர் வரை இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.