"234 எம்எல்ஏக்களிடமும் சத்தியம் வாங்கிய முதல்வர் விஜய்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்!
மக்களுக்கு உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதலமைச்சர் விஜய் சத்தியம் வாங்கியுள்ளதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதியோர் இல்லங்கள் பெருகுவது வேதனை அளிப்பதாகவும், பெற்று வளர்த்த பெற்றோர்களை இறுதிவரை மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
ஜாதி மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்ற முந்தைய நிலையைத் தற்போது தவெக ஆட்சி மாற்றி எழுதியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வாக்களித்த மக்களுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 234 எம்எல்ஏக்களையும் முன்னிலைப்படுத்தி முதல்வர் விஜய் சத்தியம் வாங்கியதாக அவர் கூறினார். இந்தியாவில் வேறு எந்தக் கட்சியின் முதலமைச்சரும் செய்யாத இந்தச் செயலைத் தவெக அரசு செய்து காட்டியுள்ளதாகவும், தாங்கள் அனைவரும் நேர்மையாகப் பணியாற்றுவோம் எனச் சத்தியம் செய்துகொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.