சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் - முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல புதிய முகங்கள் மக்கள் பிரதிநிதிகளாக முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். இத்தகைய சூழலில், புதிய மற்றும் இளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த முகாமைக் குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
மக்கள் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பிரதிபலிப்பது மற்றும் அவையின் மாண்பை எவ்விதம் காப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும். இன்றும், நாளையும் என இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகளில், மூத்த அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றச் செயலகத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
இந்த முகாமில், சட்டமன்ற அவையில் கேள்விகளை எழுப்பும் முறைகள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் விதிகளுக்கு உட்பட்டுப் பங்கேற்பது எப்படி? சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அவை மரபுகள் என்னென்ன? அரசுத் திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாகப் பயன்படுத்துவதிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு ஆகியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடமைகளை முழுமையாக உணர்ந்து, விவாதங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடோ அல்லது வித்தியாசமோ இன்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.