‘சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தை நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தனித்துவமான உள்கட்டமைப்புடன் கூடிய "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்னும் புதிய சிறப்புப் பணிக்குழுவை அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இத்திட்டத்தின் தொடக்க விழா நாளை சென்னை எழும்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை மே 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, இச்சிறப்புப் படையின் ரோந்து வாகனக் கொடியசைப்பைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்றுகிறார். பொதுமக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும் வகையிலும், குற்றங்களைக் கண்காணிக்கும் விதத்திலும் இந்த அதிரடிப்படை காவலர்களுக்கெனப் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் நவீனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பெண் படையில் இடம்பெறும் பெண் காவலர்களுக்குக் கருநீல நிறச் சட்டை , காக்கி நிறப் பேண்ட் மற்றும் பிரத்யேகத் தொப்பிகள் சீருடையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பணியின் போது வெளிப்படைத்தன்மையைப் பேணவும், ஆதாரங்களைப் பதிவு செய்யவும் காவலர்களின் சட்டையில் பொருத்தக்கூடிய பிரத்யேக கேமரா கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட அதிநவீனத் தொடர்பு வசதிகள் கொண்ட ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கவுள்ள இந்தச் சிறப்புப் படை, ஒரு ஐஜி மற்றும் எஸ்பி அந்தஸ்திலான உயர் அதிகாரிகளின் தலைமையில் செயல்படும். குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்குப் போலீஸ் நடமாட்டத்தை அதிகரிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை ஆரம்பத்திலேயே தடுப்பதே இத்துறையின் முதன்மை நோக்கமாகும்.
பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி மீட்பு மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, சமூக நலத்துறை மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து விழிப்புணர்வுப் பணிகளையும் இக்குழுவினர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.