நாளை சொந்த தொகுதிக்கு செல்கிறார் முதலமைச்சர் விஜய் - வியாசர்பாடியில் புதிய அலுவலகம்!

 

தமிழக முதலமைச்சர் விஜய், தனது சட்டமன்றத் தொகுதியான பெரம்பூருக்கு நாளைநேரில் செல்கிறார். தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை, வியாசர்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்த அலுவலகம், தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்கும் பணிகளை ஒருங்கிணைக்க, தலா 10 பணியாளர்கள் கொண்ட பிரத்யேகக் குழுவினர் இந்த அலுவலகத்தில் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இதன் மூலம் முதலமைச்சரைத் தொகுதி மக்கள் எளிதாகத் தொடர்புகொண்டு, தங்கள் கோரிக்கைகளை முறையிட முடியும். அலுவலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது தொகுதியில் பல்வேறு களப்பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அலுவலகத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் அவர் நேரடியாக ஆய்வு செய்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதுடன், கடையின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிகிறார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாகப் பெண்டிங்கில் இருந்த நிலப் பட்டாக்களை முதலமைச்சர் நேரடியாக வழங்குகிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தொகுதியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் முதலமைச்சர் விஜய் எடுக்கும் இந்த நடவடிக்கை தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.