முதல்வர் விஜய்யின் ரோடு ஷோவிற்கு இடையூறு - தாராபுரத்தில் நாதக வேட்பாளர் கார்த்திகா குண்டுக்கட்டாக கைது!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய்யின் ஊர்வலத்திற்கு இடையூறு செய்ததாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.கார்த்திகா மற்றும் கட்சியினர் காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
தவெகவினர் 'TVK.. TVK..' என விசில் அடித்து கோஷம் எழுப்பியபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கட்சியைக் கொடியை அசைத்துத் தங்களது எதிர்ப்பையும் இருப்பையும் காட்ட முயன்றார். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, தவெகவினர் நாதக வேட்பாளரின் வாகனத்தைச் செல்லவிடாமல் தடுத்தனர்.
தங்களைப் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்துத் தடுத்த தவெகவினரைக் கண்டித்து நாதகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய்யின் வாகனம் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற பின், ரோடு ஷோவிற்கு இடையூறாகச் செயல்பட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா மற்றும் கட்சியினரைத் காவல்துறையினர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திக் கைது செய்தனர்.