பட்டு வேட்டி சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர்... !
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு வரும்போது உடை விஷயத்தில் தனித்துவத்தைக் கடைப்பிடித்து வருகிறார். வழக்கமாக அவர் மேலைநாட்டு பாணியிலான ஆடைகளை அணிந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், வழக்கம் போல இல்லாமல் பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்தார். இவரை பாரம்பரிய உடையில் கண்ட அரசு உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
முதலமைச்சரின் இந்தத் திடீர் ஆடை மாற்றத்திற்கான சுவாரசியக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது நெருங்கிய நண்பரும் மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் பங்கேற்க அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து சென்றிருந்தார்.
விழா முடிந்த கையோடு ஆடையை மாற்ற நேரமின்றி, அதே உடையில் நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்குப் பணிகளைத் தொடர வந்துள்ளார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்திற்குப் பட்டு வேட்டி சட்டையில் வந்து இறங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. வழக்கமான மேலைநாட்டு உடையில் இருந்து மாறுபட்டுத் பாரம்பரிய உடைக்கு மாறியது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் இந்த உடையிலேயே பங்கேற்றார்.