முதல்வரின் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பைக்கில் வந்த மாணவருக்கு ரூ.8,000 அபராதம்!

 

சென்னை நீலாங்கரைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளின் போது, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குப் புறப்படுவதையொட்டி போலீசார் போக்குவரத்தைத் தற்காலிகமாகத் தடை செய்து நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது, பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர் ஒருவரைப் போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சென்னையை அடுத்த நீலாங்கரைப் பகுதியில் நேற்று முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் வழித்தடப் பணிகளுக்காகப் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையிலும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற பாதுகாப்புத் தடுப்புகளை (Barricades) எதையும் பொருட்படுத்தாமல், எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் அதிவேகமாக வந்துள்ளார். உடனடியாக உஷாரடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த பைக்கை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வாகனம் ஓட்டியவர் நீலாங்கரையைச் சேர்ந்த விஷால் (18) என்ற கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீதான ஆய்வில் பல போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், பாதுகாப்புத் தரங்களை மதிக்காததற்காகவும் கல்லூரி மாணவர் விஷாலுக்கு மொத்தம் ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவரது பெற்றோரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வரவழைத்து, உரிய அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். பாதுகாக்கப்பட்ட விஐபி வழித்தடங்களில் இதுபோன்று விதிகளை மீறும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.