இளம்பெண் தொழிலதிபரை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்த முதல்வரின் உதவியாளர் - ஷோபா ரெட்டி குற்றச்சாட்டு!

 

தெலங்கானா மாநிலத்தில் வெளிப்புற விளம்பரத் துறையில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலதிபர் ஒருவர், மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் உதவியாளர் மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபரான ஷோபா ரெட்டி, வெளிப்புற விளம்பரத் துறையில் தகுந்த வணிக வாய்ப்புகளைத் தேடி வந்துள்ளார். அப்போது முதலமைச்சரின் உதவியாளர் எனக் கூறிக்கொள்ளும் நபர் ஒருவர், தன்னைச் சந்திக்குமாறு விருந்தினர் மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த உதவியாளரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற சந்திப்பு தனக்கு மிகவும் சங்கடமான சூழலை உருவாக்கியதாக ஷோபா ரெட்டி தெரிவித்துள்ளார். அரசுப் பணியில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்திப் பெண் தொழிலதிபர்களை இதுபோன்று அழைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் தேவையில்லை என்றும், சட்டப்பூர்வமான வணிக வாய்ப்புகள், சமமான அணுகுமுறை மற்றும் முறையான கண்ணியத்தை மட்டுமே தான் எதிர்பார்ப்பதாகவும் திட்டவட்டமாகத் குறிப்பிட்டுள்ளார்.