தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றம்!
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி திடீரென அகற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதைக் காரணம் காட்டி, பொதுமக்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்குள் சென்று மனு அளிப்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'அனைவருக்கும் அனுமதி இல்லை' என்ற புதிய நடைமுறையின் கீழ், பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களைச் செயலகத்திற்குள் நேரில் சென்று அளிக்காமல், வெளியே வைக்கப்பட்டிருந்த தனிப்பிரிவு புகார் பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அரசின் இந்த புதிய விதியால், தங்களது நியாயமான கோரிக்கைகளையும், அவசரப் புகார்களையும் அதிகாரிகளிடம் நேரில் விளக்கி கூற முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இப்புதிய கட்டுப்பாட்டுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
புகார் பெட்டி முறைக்கு மக்களிடையே எழுந்த அதிருப்தியை உணர்ந்த அரசு நிர்வாகம், தற்போது அந்தப் புதிய உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை முந்தைய பழைய நடைமுறையின்படியே, எவ்வித தடையுமின்றி நேரடியாகத் தலைமைச் செயலகத்திற்குள் சென்று அங்குள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.