பகீர்... பைக்குள் குழந்தையை வைத்து பைக்கில் தந்தை ஆபத்தான பயணம்... !
கர்நாடக மாநிலத்தின் கடக் நகரில் பார்ப்பவர்களை நெஞ்சடைக்க வைக்கும் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள திப்பு சர்க்கிள் பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது அவர் தனது பிஞ்சு குழந்தையை, பைக் பக்கவாட்டில் தொங்கவிடப்படும் லக்கேஜ் பைக்குள் வைத்து, அதன் தலை மட்டும் வெளியே தெரியும்படி ஆபத்தான முறையில் அமர வைத்து வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்ட இந்த விநோதப் பயணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள், அந்த நபரை நிறுத்தி எச்சரித்துள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் கூறிய அறிவுரைகளை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த தந்தை, அலட்சியமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். இந்தத் துயரமான காட்சியைப் பின்னால் வந்தவர்கள் தங்களது கைப்பேசியில் ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிரவே, அது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி கடுமையான கண்டனங்களை அள்ளியது.
இணையத்தில் வைரலான அந்தக் காணொளியில் வண்டியின் எண் தெளிவாகத் தெரிந்ததால், போக்குவரத்துத் துறை தரவுகளை வைத்துப் போலீசார் சில மணி நேரங்களிலேயே அந்த நபரின் முகவரியைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த அதிகாரிகள், "குழந்தை உங்களுடையதாகவே இருந்தாலும், அதன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இப்படிச் செல்வது சட்டப்படி பெருங்குற்றம்" என்று கடுமையாக எச்சரித்து அவருக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர்.