நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ ...  சிறுவனின் கைகளைக் கட்டி மேற்கூரையில் தொங்கவிட்ட பெற்றோர்!  

 

இந்தியப் பெற்றோர்களிடம் நிலவி வரும் பழமைவாத சிந்தனைகள் சில நேரங்களில் எல்லை மீறி சித்திரவதையாக மாறுவதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவனின் இரண்டு கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு வீட்டின் மேற்கூரையில் இருந்து அவன் ஆபத்தான முறையில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டுள்ளான். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த இந்த கொடூரத்தை, எதிரே இருக்கும் குடியிருப்பில் இருந்து கவனித்த அண்டை வீட்டார் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்து அதைத் தங்களின் அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தபடியே அந்தப் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

WTF …. pic.twitter.com/Bj2QebTYg0

— Indrajit (@Lotus_indrajit) July 6, 2026

அண்டை வீட்டாரின் எச்சரிக்கையைக் கேட்டும் தங்களின் தவறை உணராத அந்தப் பெற்றோர், தடித்த வார்த்தைகளால் அண்டை வீட்டாரிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்துள்ளனர். என் பிள்ளை, நான் அப்படித்தான் செய்வேன், எனக்குப் புத்தி சொல்ல வராதீர்கள் என்ற தொனியில் அவர்கள் பேசியது அண்டை வீட்டாரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், அந்தப் பெற்றோருக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் தங்களின் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

முறையான வளர்ப்பு முறையை நீங்கள் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் குழந்தைகளை இப்படிச் சித்திரவதை செய்யாதீர்கள் என்று இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர். குழந்தையைத் துன்புறுத்திய அந்தப் பெற்றோர் மீது சட்டப்படியான கடுமையான வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அந்தப் பெற்றோரைக் கைது செய்யக் குழந்தைகள் நல அமைப்புகள் மற்றும் காவல்துறையினர் தங்களின் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.