பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி.. 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை - சக மாணவர்கள் 9 பேர் கைது!

 

தூத்துக்குடியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசுப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவனை, அதே வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் கடந்த ஒரு வருடமாகக் கட்டாயப்படுத்தி ஆடையின்றி அடித்துள்ளனர். மேலும் அவனது பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி கடுமையான பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் கொடுமைகளை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும், மேலும் அதிக சித்திரவதைகளுக்கு ஆளாக்குவோம் என்றும் சக மாணவர்கள் மிரட்டியதால் அந்தச் சிறுவன் அச்சத்தில் இருந்துள்ளான். நீண்ட நாட்களாக மன உளைச்சலிலிருந்த அந்த மாணவன், ஒரு கட்டத்தில் அழுது கொண்டே நடந்த வன்கொடுமைகளைத் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான்.

இது குறித்து தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அதே வகுப்பைச் சேர்ந்த 9 மாணவர்களையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அரசுப் பள்ளி வளாகத்திலேயே சக மாணவர்களால் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.