பகீர் வீடியோ... தெருநாய்கள் கூட்டமாகத் துரத்திய அதிர்ச்சியில் 17 வயது மாணவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாப்பூர் பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகத் துரத்திய அதிர்ச்சியிலும் பயத்திலும் ஓடிய 17 வயது பள்ளி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மளிகைக் கடைக்குள் தஞ்சம் புகுந்த மாணவர் சில நொடிகளிலேயே மயங்கி விழும் பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

#WATCH | Stray Dog Menace In Badlapur: Class XII Student Dies After Fleeing In Fear; CCTV Captures Final Moments Reported by @AzmiJourno #Badlapur #MaharashtraNews #StrayDog https://t.co/IdBU17PELf

— Free Press Journal (@fpjindia) November 27, 2026


பத்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் ஷிண்டே (17) என்ற மாணவர் 12-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை வகுப்பு முடிந்து நண்பர்களுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பத்லாப்பூர் மேற்கு ஷானி நகர் பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக அவரைத் துரத்தியதாகக் கூறப்படுகிறது.

நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயத்துடன் வேகமாக ஓடிய ஹர்ஷல், வழியில் இருந்த மளிகைக் கடைக்குள் தஞ்சம் புகுந்தார். ஆனால், கடைக்குள் நுழைந்த சில நொடிகளிலேயே அவர் திடீரென மயங்கித் தரையில் சரிந்தார். நாய்களைக் கண்டு ஏற்பட்ட கடும் பதற்றம் மற்றும் வேகமாக ஓடியதன் காரணமாக ஹர்ஷலுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்போது கடைக்குள் இருந்த மூதாட்டி ஒருவர் அதிர்ச்சியடைந்து மாணவருக்குத் தண்ணீர் கொடுத்து முதலுதவி அளிக்க முயன்ற போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஹர்ஷல் கடையை நோக்கி வேகமாக ஓடி வருவதும், உள்ளே சென்றதும் மயங்கி விழுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. 17 வயதிலேயே மாணவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், தெருநாய்கள் அச்சுறுத்தல் குறித்த அச்சத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது.