21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கிய முதியவர்! வங்கிக் கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது திடீர் கண்டுபிடிப்பு!
சீனாவில் கடந்த 21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்த 71 வயது முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ.56 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியப் பணம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக தனது கணக்கில் பணம் சேர்ந்து கொண்டிருப்பது தெரியாமல் அவர் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ‘ரூ’ என்ற 71 வயது முதியவர் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக கடந்த 21 ஆண்டுகளாக குப்பை பொறுக்கும் தொழிலை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் சமூக உதவித் துறை அதிகாரிகள் முதியவரின் நிலை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவரது ஓய்வூதியக் கணக்கை அதிகாரிகள் சரிபார்த்தபோது எதிர்பாராத தகவல் தெரியவந்தது.
கடந்த 21 ஆண்டுகளாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை அவரது வங்கிக் கணக்கிலேயே தொடர்ந்து சேர்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. அந்தக் கணக்கில் மொத்தம் 4,24,204 யுவான் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.56 லட்சத்துக்கும் அதிகமாகும்.இதையடுத்து அதிகாரிகள் முதியவரை நேரில் சந்தித்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். மேலும், அந்தத் தொகையை அணுகுவதற்கான புதிய வங்கி அட்டையையும் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை அறிந்த முதியவர் அதிர்ச்சியடைந்ததுடன், ஆனந்தக் கண்ணீரும் வடித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, தனது வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை என்றும், தனக்கு உதவி செய்த அரசு அதிகாரிகளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.பல ஆண்டுகளாக வறுமையில் வாழ்ந்த முதியவருக்கு, அவரது பெயரில் ஏற்கனவே சேர்ந்து கொண்டிருந்த ஓய்வூதியப் பணம் தற்போது தெரியவந்துள்ளது. இதனால் முதுமைக் காலத்தில் அவருக்கு நிதி உதவி கிடைத்திருப்பது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.