சொந்தக்காரங்க யாரும் இல்ல... கதறிய இளைஞரின் திருமணத்திற்கு சீர்வரிசையுடன் குவிந்த இணையவாசிகள்!
சீனாவில் திருமணத்திற்கு உறவினர்கள் அதிகம் வரமாட்டார்கள் என்ற கவலையில் இணையவாசிகளுக்கு அழைப்பு விடுத்த இளைஞருக்கு, எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கானோர் திருமணத்தில் பங்கேற்க முன்வந்ததுடன், பரிசுப் பொருட்கள் மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கினர்.
சீனாவின் யுன்னான் மாகாணம், ஜாவோடோங் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஸு செங்ஹாங் என்ற இளைஞர், சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் தாயும் மறுமணம் செய்துகொண்டதால், மூத்த சகோதரரின் ஆதரவுடன் வளர்ந்தார். கடினமாக உழைத்து காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யப் பணம் சேமித்த அவர், திருமணத்திற்கு உறவினர்கள் குறைவாகவே வருவார்கள் எனக் கவலைப்பட்டார்.
இதனால் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, தனது திருமணத்திற்கு வருமாறு இணையவாசிகளை அன்புடன் அழைத்தார். இதற்கு பலரும் உற்சாகமாகப் பதிலளித்து திருமணத்தில் கலந்துகொண்டனர்.
சிலர் பரிசுப் பொருட்களையும் உணவுப் பொருட்களையும் கொண்டுவந்தனர். சமையல் கலைஞர்கள் இலவசமாக உணவு தயாரித்துக் கொடுத்தனர். திருமண ஊர்வலத்திற்காக சொகுசு கார்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் ஒருவர் மணமக்களின் பயணத்திற்காக தனது மேபாக் காரையே வழங்கினார்.
எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்ததால் திருமண ஏற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன. அந்நியர்களின் இந்த அன்பும் உதவியும் இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.