30 வயதிலேயே வேலையை விட்ட சீன இளைஞர்... ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம் தரும் முதலீடு!

 

 

 

சரியான முதலீட்டுத் திட்டம் இருந்தால் இளம் வயதிலேயே நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும் என்பதை சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது செயல்மூலம் காட்டியுள்ளார்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த பான் ஜுன்ஜி (Fan Junjie), வேலைக்காக ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகருக்குச் சென்றார். அங்கு இணையவழி மருத்துவ விற்பனைத் துறையில் பணியாற்றிய அவர், தினமும் சுமார் 18 மணி நேரம் வரை உழைத்துள்ளார். இதன் மூலம் சேமித்த பணத்தைப் பயன்படுத்தி, விலை குறைவாகக் கிடைத்த பழைய வீடுகளில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.

allowfullscreen

14 வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டார்!

2023-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளில், சுமார் 20 லட்சம் யுவானுக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டு 14 பழைய வீடுகளை வாங்கினார். அவற்றில் 11 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 2.10 லட்சம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் ரூ.29 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கிடைக்கிறது. இதையடுத்து தனது 30-வது வயதிலேயே வேலையை விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.

இருப்பினும், வீடுகளைப் பராமரிப்பது, வாடகைதாரர்களைக் கையாள்வது, பழுதுபார்ப்புச் செலவுகள் போன்ற சவால்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளன. இதனால் இனி புதிய வீடுகளை வாங்காமல், ஈவுத்தொகை வழங்கும் பங்குகள் மற்றும் முதலீட்டு நிதிகளில் பணத்தை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.