5 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர்… கைவிடாத மனைவியின் அன்பால் மீண்ட நெகிழ்ச்சி!
சீனாவில், 5 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர் மீண்டும் கண் விழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பராமரித்து வந்த மனைவியின் அன்பும் அர்ப்பணிப்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஜாவோ என்பவர், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது மேற்கூரையில் சிக்கித் தவித்த 3 வயது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மேலே ஏறினார். குழந்தையைப் பாதுகாப்பாக அணைத்தபடி கீழே இறங்கும்போது சுமார் 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். குழந்தைக்குக் காயம் ஏற்படாமல் காப்பாற்றியபோதும், ஜாவோவுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் குணமடைவதற்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவித்தபோதும், அவரது மனைவி சாங்மெய் நம்பிக்கையை இழக்கவில்லை. தினமும் கணவரைப் பராமரித்து, மசாஜ் செய்து, அவரிடம் தொடர்ந்து பேசி வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜாவோவின் உடலில் அசைவுகள் தென்பட்டன. தொடர்ந்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அண்மையில் கண் விழித்த அவர், மனைவியைப் பார்த்ததும் கண்ணீர் சிந்தினார். பின்னர் சிரமத்துடன் 'ஐ லவ் யூ' என்றும் கூறியுள்ளார்.தற்போது அவர் பேசுவதைப் புரிந்துகொண்டு, கைகளால் பதிலளிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.