அமெரிக்காவில்  சீன ரோபோக்களுக்குக் கடும் தடை !  

 

அமெரிக்கா மற்றும் சீனா இடையே தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மனித வடிவ ரோபோக்கள் மற்றும் 4 கால் ரோபோக்களுக்கு அமெரிக்கக் கூட்டாட்சித் தகவல் தொடர்பு ஆணையம் தடை விதித்துள்ளது. இதனுடன் மின் மாற்றிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுச் சீன நிறுவனங்களின் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அளவில் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தகவல் மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன ரோபோக்கள் மூலம் அமெரிக்கர்களின் தனிநபர் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பத் தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோபோக்கள் மூலம் முக்கியத் தொழில் நிறுவனங்களைக் கண்காணிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கத் தகவல் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் புதிதாகச் சந்தைக்கு வரும் சீன ரோபோக்களின் விற்பனை அமெரிக்காவில் முடங்கியுள்ளது.

ஏற்கனவே சந்தையில் உள்ள ரோபோக்களுக்கான அனுமதியை ரத்து செய்யவும் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசின் இந்தத் தடை நடவடிக்கைக்குச் சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க உரிய பதிலடி கொடுக்கப்படும் எனச் சீன வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா தனது சொந்த நாட்டு ரோபோ உற்பத்தியை அதிகரிக்கவும் சீன நிறுவனங்களை முடக்கவும் திட்டமிட்டுச் செயல்படுவதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளது. முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தரவு மையங்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. சீன ரோபோக்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையால் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.