இனி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுங்க வரி ரத்து ... சீனா அதிரடி அறிவிப்பு!
சீனாவுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ள மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா தற்போது பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு இனி சுங்க வரி வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையானது வரும் 2026 மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028 ஏப்ரல் 30-ந் தேதி வரை இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என சீன சுங்கவரி ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளுடன் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த பூஜ்ஜிய சுங்கவரி கொள்கையானது மொத்தம் 53 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பொருந்தும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் விளக்கியுள்ளார். இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளின் ஏற்றுமதி வணிகம் கணிசமாக உயரும் என்றும் இரு தரப்பு வர்த்தக உறவுகள் வலுவடையும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பசுமை வழித்தடத்தை மேம்படுத்த சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் வாயிலாக சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் சீராக அதிகரித்து இரு நாடுகளின் பொருளாதாரமும் மேன்மையடையும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டாலும் இது சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.